ரூ.9 கோடியில் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு வரும் தஞ்சை சமுத்திரம் ஏரி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.!

தஞ்சாவூர்: சமுத்திரம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையில் ரூ.9 கோடியில் பல்வேறு பணிகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு கரைகளும் பலப்படுத்தப்படுகின்றன. படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம், பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர்- நாகை சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது.  பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டது.

அவர்களுடைய காலத்தில்தான் இதற்கு சமுத்திரம் ஏரி என்ற பெயர் வந்தது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்க்கும்போது, இந்த ஏரி தஞ்சாவூர் நகரிலிருந்து தொடங்கி மாரியம்மன் கோயில் வரை பரந்து விரிந்து இருந்தது தெரிகிறது. மராட்டியர் காலத்தில் இது முக்கியமான ஏரியாக இருந்துள்ளது. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

இதில், கடல் போல தண்ணீர் இருந்ததால், இதை சமுத்திரம் ஏரி என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம் ஏரி அமைந்துள்ளது . பழமையான இந்த ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். நாளடைவில் அந்த ஏரியானது குட்டையாக மாறிவிட்டது. இந்தநிலையில் இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் சீரிய முயற்சியில் கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது.

ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம், பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, 40 கார்கள் நிறுத்தும் அளவிற்கு வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் ஏற்படுத்தப்படுகிறது. அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் இந்த ஏரியை சுற்றி சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. பின்பு இந்த சமுத்திரம் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்படுத்தி கூடிய விரைவில் வர உள்ளது.

Related Stories: