சென்னை விஐடியில் தேசிய அளவிலான கலை திருவிழா: நாளை தொடங்குகிறது

சென்னை: சென்னை விஐடி வளாகத்தில் தேசிய அளவிலான கலை திருவிழா நடைபெற உள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி வளாகத்தில் வைப்ரன்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழா நாளை (மார்ச் 2) தொடங்கி 4ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. விஐடியின் துணை தலைவர் சேகர் விஸ்வ நாதன், இணை துணை வேந்தர் காஞ்சனா, கூடுதல் பதிவாளர் மனோகரன், மாணவர் நல இயக்குநர் (விஐடி) ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விஐடியின் துணை தலைவர் சேகர் விஸ்வநாத் கூறியதாவது: தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவை பிரபல கிரிக்கெட் வீரர் சிவம் துபே தொடங்கி வைக்கிறார். முதல்நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல பின்னணி பாடகர்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

நிறைவு விழாவில் திரைப்பட நடிகர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். 7வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 150 கலை போட்டிகள், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 வகையான விளையாட்டுப் போட்டிகள் என மொத்தம் 190 போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்த பரிசுத்தொகையாக 10 லட்சம் வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு போட்டிகளுக்கு ஏற்றவாறு 100 ரூபாய் இருந்து 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 6856 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கரக்பூர், மணிப்பால், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். இதுவரை நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதி நாள் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கலை திருவிழாவுக்கான டி-சர்ட் மற்றும் பேனர் வெளியிடப்பட்டது.

Related Stories: