மனைவி பிரிந்து ெசன்றதற்கு நீ தான் காரணம் என கூறி பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்றவருக்கு ஆயுள் சிறை: மகிளா நீதிமன்றம் அதிரடி

சென்னை:  சென்னை சிந்தாதிரிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் கற்பகம் (36). இவரது வீட்டின் அருகில் வசித்தவர் மோசஸ் சராக் (41). இவரது மனைவி குடும்ப தகராறில் இவரை விட்டு கடந்த 9.9.2018ம் தேதி பிரிந்து சென்று விட்டார். இதற்கு கற்பகம் தான் காரணம் என கூறி, மோசஸ் சராக், கற்பகத்திடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மோசஸ் சராக், அருகில் இருந்த சுத்தியலை எடுத்து, கற்பகத்தின் தலையில் பலமாக அடித்தார். இதில் கற்பகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசஸ் சராக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய சுத்தியல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கொலையை நேரில் பார்த்த சாட்சிகளை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் இருதரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம், அனைத்து ஆதாரங்களும் மோசஸ் சராக்கிற்கு எதிராக நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர், குற்றவாளி என உறுதி செய்தது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றவாளி மோசஸ் சராக்கிற்கு ஆயுள் சிறை தண்டனையும், 16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: