தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு ஊழியர்கள் விவரம் அனுப்ப கோரிக்கை: அனைத்து துறை செயலருக்கும் நிதித்துறை செயலாளர் சுற்றறிக்கை

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்  என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ். என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு சில அரசு ஊழியர்களை மாற்றியது தொடர்பான உத்தரவு மற்றும் அது பிறப்பிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளின் விவரங்கள், மேலும் அந்த உத்தரவை அமல்படுத்திய முறை ஆகியவை பற்றி ஏற்கனவே கடந்த ஜனவரி 31ம் தேதி விவரங்கள் கோரப்பட்டு இருந்தன.

மேலும் சில விவரங்களை உடனடியாக தர வேண்டும். அதன்படி, தலைமை செயலத்தில் உள்ள உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள ஊழியர்கள் யாரையும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் அதன் தேதி, அதன் நகல் மற்றும் 2003ம் ஆண்டில் இருந்து இதுவரை செயல்படுத்தப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டும். அந்த வகையில் அரசாணையின் மூலமாகவோ, சரிபார்த்தல் மூலமாகவோ அல்லது கோர்ட் உத்தரவுகளின் மூலமாகவோ, அது தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் மூலமாகவோ எந்த ஊழியராவது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விருப்பம் தெரிவிக்கும் அந்த ஊழியர்களின் விவரங்கள் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்னையில் தீர ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க தேவைப்படுவதால் அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.

Related Stories: