சவால்களை ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின்: நடிகர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி பிராட்வே ராஜா அண்ணாமலைமன்றத்தில் வருகிற 12ம் தேதி வரை நடக்கிறது. புகைப்பட கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி முன்னிலை வகித்தார்.

புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: முக்கியமான ஒரு மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக இருக்கும் சந்தோஷம் நிறைய இருக்கும் என்றாலும், சவால்களும் நிறைய உண்டு. சந்தோஷத்தை அனுபவித்து, சவால்களையும் ஏற்றுப் படிப்படியாக தொண்டனாக, இளைஞர் அணி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, இன்று  தமிழகத்தின் முதல்வராக என்று படிப்படியாக உயர்ந்து வருவது என்பது, அவருடைய  பொறுமை மட்டுமல்ல, திறமையையும் காட்டுகிறது. சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்தி கொண்டிருக்க வேண்டிய அவசியம்  இன்று இருக்கிறது. ஏனென்றால் சரித்திரத்தை மாற்றி எழுத துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

அதுவும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுதி காட்டுவதில் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு சவால் விடுவது போல் நாம்  நினைவு கொள்ள வேண்டும். அந்த நினைவு தான் இது. திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. சீன் பை சீன் தான் கதையை நகர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், நந்தகுமார், நடிகர் மல்லூரி, முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், சென்னை மாநகராட்சி 5வது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், கவுன்சிலர் வழக்கறிஞர் பரிமளம், மவுரியா, வர்த்தகர் அணி உதயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: