பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இன்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
