சென்னையில் ₹1,500 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்க திட்டம்: டெண்டர் கோரியது மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: ₹1500 கோடியில் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி பேருந்து முனையங்களை நவீனப்படுத்த மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.  சென்னையில் உள்ள போக்குவரத்து நிலையங்களை சீரமைக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாநிலம் முழுவதும் 16 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று பேருந்து முனையங்கள் தற்போது நவீனமயமாக்கப்பட உள்ளன. இவை 1,543 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர்  கூறியதாவது:

திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று பேருந்து முனையங்களிலும் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளன. தரைத்தளத்தில் பணிமனை, பேருந்து நிறுத்தங்கள், பயணிகள் ஓய்வறை, கழிப்பிடங்கள், குடிநீர் விநியோகம் செய்யும் யூனிட்கள் உள்ளிட்டவை அமைய உள்ளது. உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

மேலும் பேருந்து முனையங்களில் பருவமழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பணிகளை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி ஒப்பந்த புள்ளிகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பேருந்து நிலையங்களை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: