சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமி நாராயணன் பதவியேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, புதிய கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். இதையடுத்து, நேற்று நீதிபதியாக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
புதிய நீதிபதியினை தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி லூயிசாள் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் எல்.செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்று பேசினர். இதை தொடர்ந்து ஏற்புரையாற்றிய நீதிபதி வி.லட்சுமிநாராயணன், சட்டம் படிக்கத் தொடங்கிய போது தந்தை இறந்து விட்டதால், தாய் தான் தன்னை ஆளாக்கினார். சகோதரர் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக் கொண்டார். நீதிபதியாக பொறுப்பேற்றது சாதனையல்ல, அதையும் தாண்டியது. எனது சீனியர் அணிந்த கவுனைத்தான் இன்று நான் பதவியேற்கும்போது அணிந்து வந்திருக்கிறேன் என்றார்.
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் பதவியேற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 1970ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வழக்கறிஞர் வெங்கடாச்சாரி-சரோஜா தம்பதிக்கு மகனாக பிறந்த லட்சுமி நாராயணன், புரசைவாக்கம் எம்.சி.டி.முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பும், வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பும், பெங்களூருவில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்துள்ளார். கடந்த 1995ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த அவர், கடந்த 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் ஆஜரானதுடன், சட்டம் குறித்து 350 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.