மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கை-இந்திய அமைச்சர்கள் ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: மீனவர்கள் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையே அமைச்சர்கள் அளவிலான  பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் எல் முருகன் கூறினார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்- மத்திய உவர் நீர் நிறுவன வளாகத்தில் மீன்வளர்ப்பு காப்பீட்டுத் தயாரிப்பு, வெள்ளை இறாலின் மரபணு மேம்பாட்டுத் திட்டம், மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்புத் திட்டம்  ஆகிய திட்டங்களை ஒன்றிய  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய  இணை அமைச்சர் எல்.முருகன், ஒன்றிய மீன்வளத்துறை செயலாளர் ஜித்தேந்திர நாத் சுவேன், மாநில கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் மற்றும் அரசு உயரதிகாரிகள், இறால் விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் கேளம்பாக்கத்தில் 40 ஏக்கரில் அமையவுள்ள வெள்ளை இறால் இனப்பெருக்கம் மற்றும் மேம்பாட்டு வளாகத்திற்கு ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: ஒன்றிய மீன்வளத்துறை மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காசிமேடு துறைமுகம் ரூ.120 கோடி செலவில் மறுசீராய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கடற்பாசி வளர்ப்பிற்கு 126 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனாவையும் தாண்டி மீன்வளத்துறை 30% வளர்ச்சி அடைந்துள்ளது. மீனவர்கள் பிரச்னையை பொறுத்தவரை கடந்த முறை நான் இலங்கை சென்ற பொது பேசினேன் கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினேன். ஜிபிஎஸ் கருவியை பொருத்தினால் மீனவர்களை கண்காணிக்க முடியும். மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Related Stories: