மணலி மண்டலத்தில் தரமில்லாத சாலை அமைத்த ஒப்பந்ததாரர் தகுதி நீக்கம்: நகராட்சி நிர்வாக செயலாளர் அதிரடி

திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில் தரம் இல்லாத சாலை அமைத்த ஒப்பந்ததாரரை தகுதி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக செயலாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டில், சடையங்குப்பம் புதிய கால்வாய் மேம்பாலத்திலிருந்து சடையங்குப்பம் சாலை சந்திப்பு வரை ₹18.23 லட்சம் செலவில் சுமார் 400 மீட்டர் நீளம், 4.3 மீட்டர் அகலத்திற்கு தார்சாலை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலை தரமாக போடப்படாததால், ஒருசில மாதங்களிலேயே குண்டும், குழியுமாக ஆங்காங்கே பழுதடைந்து விட்டது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறு கீழே விழுந்து காயமடைந்து வருகின்றர். இதையடுத்து, இந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், தரம் இல்லாத சாலையை அமைத்த சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தரம் இல்லாத சாலை அமைத்த மகாதேவன் என்ற ஒப்பந்ததாரரின் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விசாரணை நடத்தினார். அதில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் செய்த பல பணிகள் இதுபோல் தரம் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஒப்பந்ததாரர் மகாதேவனை தகுதி நீக்கம் செய்ய ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் சிவ் தாஸ் மீனா, ஒப்பந்ததாரர் மகாதேவனை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: