சென்னை: மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து விற்பனை செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் தொடர்ச்சியாக மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சோதனைகளின்போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
