கழிவுநீர் கால்வாயில் அண்ணன் மகன்கள் விழுந்ததாக மனநலம் பாதித்தவர் காவல் நிலையத்தில் புகார்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவகம் முன்பு கழிவுநீர் கால்வாயில் விழுந்து, அண்ணன் மகன்கள் இருவர் மாயமானதாக மனநலம் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் கொடுத்த பொய்யான தகவலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (40). இவர், நேற்று காலை  ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு சென்று, ராஜீவ்காந்தி நினைவிடம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தனது அண்ணன் மகன்களான விஷ்வா, வினோத் ஆகிய இருவரும் கால்வாயில் விழுந்துவிட்டதாகவும், தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை எனவும் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், தீயணைப்பு மீட்பு படை வீரர்களின் உதவியோடு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீர் கால்வாயில் உள்ளே சென்று தேடி பார்த்துள்ளனர். இதில், மாயமான இருவருக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாததால், கணேசனிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களது வீட்டிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, கணேசன் வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். மாயமானதாக கூறிய வினோத், விஷ்வா இருவரும் ஆவடியில் உள்ள வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், ‘கணேசன் சற்று மனநலம் பாதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல்போன அவரை தாங்கள் தேடி வருகிறோம்’ என கூறியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் திரும்பிச் சென்றனர். அப்போது போலீசார், மனநலம் பாதிக்கப்பட்ட கணேசனை காவல் நிலையம் அழைத்து சென்று, அவரது உறவினர்களை வரவழைத்து, எழுதிவாங்கிக் கொண்டு, அவர்களுடன் கணேசனை அனுப்பி வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த பொய்யான தகவலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: