சென்னை மற்றும் பாண்டிச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டின் துணைத்தூதர் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் கலந்துரையாடல்

சென்னை: இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வளர்ப்பதில் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் கல்வி, ஆராய்ச்சி, கல்வி நிறுவனம், விவசாயம், சுற்றுலா, கலாச்சாரம், சினிமாத் தொழில் மற்றும் கலாச்சார சுற்றுலா ஆகியவற்றில் சாத்தியமான ஒத்துழைப்பை விவாதித்து மேம்படுத்த பிரான்ஸ் நாட்டின் வால் தா லுவரிலிருந்து கலாச்சாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணைத் தலைவர் டெல்ஃபின் பெனாசி தலைமையில் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். பிப்ரவரி மாதம் 7 ந்தேதி வருகை தந்த இக்குழுவினர் மார்ச் 3 ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் சுற்றுலா நிபுணர்களுக்கு பயிற்சி, பிரான்ஸ் - இந்தியா இடையேயான காலாச்சார பரிமாற்றம் உள்பட  பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் வால் தா லுவரிலிருந்து வருகை தந்த கலாச்சாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான துணைத்தலைவர் டெல்ஃபின் பெனாசி தலைமையிலான இக்குழுவினர், சென்னை மற்றும் பாண்டிச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டின் துணைத்தூதர் லிஸ் டால்போட் பார்ரேவுடன் இணைந்து சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று (27.02.2023) சந்தித்து சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் சந்தர மோகன் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: