சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கடந்த 24ம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது.
