சென்னை பெருநகருக்கான மாஸ்டர் பிளான் சைக்கிளிங் வசதிகளை ஏற்படுத்த நெதர்லாந்து நிறுவனத்துடன் சிஎம்டிஏ அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: சென்னை பெருநகருக்கான மாஸ்டர் பிளானில் சைக்கிளிங் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் சிஎம்டிஏ அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம்  தயார் செய்யும் பணியில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் ஈடுபட்டுவருகிறது.

மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இந்த போக்குவரத்து திட்டம் குறைந்த கார்பனை வெளியிடும் வகையிலும், குறைந்த அளவு காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்படும். மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், கொரோனா போன்ற பெருந்தொற்று ஆகிய காலங்களில் எந்தத் தடையும் இன்றி செயல்படும் வகையிலான மீள் திறனுடன் வகையில் இருக்கும். இதைத் தவிர்த்து அனைவரும் எளிதில் அணுகும் வகையிலும், நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற வகையிலும், சாலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக இது இருக்கும்.

இதற்கிடையில், சென்னை பெருநகருக்கான 3வது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியில் சிஎம்டிஏ ஈடுபட்டுள்ளது. இதில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு சைக்கிளிங் தூதரகம் என்ற அமைப்பு, போக்குவரத்து கொள்கை மேம்பாட்டு நிறுவனம், சென்னையின் சைக்களிங் மேயர் பெலிக்ஸ் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், சென்னையில் தனி சைக்கிள் பாதை அமைப்பது, மெட்ரோ நிலையங்களில் சைக்கிள் வசதி ஏற்படுத்துவது, சைக்கிள் ஷேரிங் திட்டத்தை மேம்படுத்துவது, சைக்கிள் பார்க்கிங் வசதிகளை அறிமுகம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்து துறைகளுடன் இணைந்து 3வது மாஸ்டர் பிளானில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து பெலிக்ஸ் ஜான் கூறுகையில், \\”3வது மாஸ்டர் பிளானில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். குறிப்பாக, எந்த சாலைகளில் தனி சைக்கிள் பாதை அமைக்கலாம். புதிதாக சாலைகள் அமைக்கும் போது அதில் சைக்கள் பாதை அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான தனி திட்டம் 3வது மாஸ்டர் பிளானில் இடம் பெற வேண்டும் கோரிக்கை வைத்து உள்ளோம். குறிப்பாக, கடைசி கட்ட போக்குவரத்தாக சைக்கிளை மாற்றவும் காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: