கமல் பண்பாட்டு மையம் அறக்கட்டளை தொடங்கினார் கமல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் மேற்கொண்ட பிரசார பயணம் வெற்றி அடைந்துள்ளது. பிரசாரத்துக்கு நேரம் ஒதுக்கியதற்கும், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கும் அவருக்கு நன்றி. மநீம தொடங்கியபோது பொதுச்செயலாளராக இருந்த அருணாசலம் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார். தற்போது அவர் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார். மகளிர் அணியுடன் மய்யம் மாதர் படை இணைக்கப்படுகிறது.

அதன் சார்பில் வரும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. கலை, இலக்கிய, பண்பாட்டு செயல்பாடுகளை முன்னெடுக்கவும், வேறு சில பொதுச்சேவைகளுக்கும் ‘கமல் பண்பாட்டு மையம்’ என்ற அறக்கட்டளையை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இது அரசியல் மற்றும் லாபநோக்கம் இல்லாதது. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கும் கட்சி மறுசீரமைப்பு பொறுப்புகள் இந்த செயல்திறன் அடிப்படையிலேயே இருக்கும். கட்சி கொள்கைகளையும், திட்டங்களையும் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் மீடியா மற்றும் ஐடி அணி 4 பிரிவுகளாக உருவாக்கப்படுகிறது. அவைகள் முறையே இணையதளம் தரவுகள் அணி, ஊடக அணி, சமூக வலைத்தள அணி, ஆய்வு மற்றும் கொள்கை உருவாக்க அணி ஆகிய பெயர்களில் செயல்படும். மேற்கண்ட அணிகள் ஆ.அருணாசலம் தலைமையில் செயல்படும். பிற சார்பணிகள் துணைத்தலைவர் ஏ.ஜி.மவுரியா தலைமையிலும், கட்சி வளர்ச்சி மற்றும் பணிகள் அமலாக்கம் துணைத்தலைவர் தங்கவேலு தலைமையிலும் செயல்படும்.

Related Stories: