அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேச திட்டம்

சென்னை: அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாளை அவர் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு, தனது துறை ரீதியான சில கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களை நாளை அவர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சர்வதேச அளவிலான போட்டிகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்த ஒன்றிய அரசிடம் அவர் கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது.

மேலும், டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்துக்கும் உதயநிதி ஸ்டாலின் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து அண்மையில் ஜே.என்.யூ., பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் எனத் தெரிகிறது. கடந்த வாரம் காயம் அடைந்த மாணவர்களோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 1ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பான அழைப்பிதழ்களையும் டெல்லியில் சில முக்கிய தலைவர்களிடம் அவர் நேரில் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நாளை இரவு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் இந்தப் பயணம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: