கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி கடைகளில் தரமற்ற உணவு விற்பனை: மக்களுக்கு நோய் தாக்கும் ஆபத்து

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் சுற்றி 300க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்கக்கூடிய சிக்கன், மட்டன் பிரியாணி, ப்ரைட் ரைஸ் மற்றும் வடை, போண்டா, சமோசா, பஜ்ஜி உள்ளிட்ட அனைத்துமே திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்வதால் அதை சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வறுத்த மீன், கறி, சிக்கன் ஆகியவற்றை திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

கோயம்பேடு காய்கறி, பூ, பழம் ஆகிய மார்க்கெட்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் சாலையோர கடைகளில் சாப்பிடுகின்றனர். சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட் சுற்றி தள்ளுவண்டி ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது. 150 கடைகள் இருந்த நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட கடைகள் முளைத்துவிட்டது. சாலையோர தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படும் உணவுகள் அனைத்தும் சுத்தம் இல்லாமலும் திறந்தவெளியில் விற்பனை செய்யப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் சொல்லிவிட்டோம். அதேபோல் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்துவிட்டோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தொற்றுநோயில் இருந்து பாதுகாக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடநடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளியில் உணவுகனை விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தவிர்க்க வேண்டும்’ என்றார்.சமூகநல ஆர்வலர்கள் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றிள்ள ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகளால் தினமும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் சிக்கன், மட்டன் பிரியாணிகள், வறுத்த மீன், கறி இட்லி தோசை பூரி ஆகிய உணவுகள் சுத்தமாக உள்ளதா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். தற்போது ஏராளமான கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: