மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நாற்காலிக்கு சிக்கல்?: சட்டசபை தேர்தலால் பாஜக தலைமை திடீர் முடிவு

போபால்: இந்தாண்டு இறுதியில் மத்தியபிரதேச தேர்தல் வருவதால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.

பாஜகவை விட அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ்  கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் ஆட்சி  அமைத்தது. ஆனால், பின்னர் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகளால், ஜோதிராதித்ய  சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பலர் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர்.  இதனால் காங்கிரஸ் அரசு பதவி விலக நேரிட்டது. இதையடுத்து, கிட்டத்தட்ட  ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.

மாநிலத்தில்  பாஜகவின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக சிவராஜ் சிங் சவுகான் மூன்றும்  முதல்வரானார். ஆனால் கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு  பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த  தலைவர் உமா பாரதி, தனது சொந்த கட்சி ஆட்சியை கடுமையாக விமர்சித்து  வருகிறார். எதிர்கட்சிகள் தரப்பிலும் ஆளும் பாஜக அரசு மற்றும் முதல்வர்  சவுகானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த  நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதனால் சட்டசபை தேர்தலை முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் எதிர்கொள்வதா? அல்லது புதிய தலைவரை முன்னிருத்துவதா? என்பது குறித்த பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூகையில், ‘மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டுமானால், மிகவும் கடினமாக போராட வேண்டிய நிலை உள்ளது. மாநில தலைமையில் சில மாற்றங்கள் செய்ய மத்திய தலைமை ஆய்வு நடத்தி வருகிறது. அடுத்த சில நாட்களில் வளர்ச்சி யாத்திரை நிறைவு பெறுகிறது. அதன்பின் எதிர்வரும் சட்டசபை தேர்தலை சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் எதிர்கொள்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்’ என்று கூறினர்.

Related Stories: