பல்வேறு நவீன வசதிகளுடன் காட்பாடி ரயில் நிலையம் ரூ.7 கோடியில் சீரமைப்பு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பல்வேறு வசதிகளுடன் ரூ.7 கோடி மதிப்பில்,  காட்பாடி ரயில் நிலையம் சீரமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள  முக்கியமான ரயில் நிலையங்களில் காட்பாடி ரயில் நிலையமும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும் இந்த ரயில் நிலையம் தற்போது தெற்கு ரயில்வே மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் வேலூர் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.  இந்த பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் மற்றும் பொற்கோயில் போன்ற முக்கிய இடங்கள் காட்பாடியை சுற்றியே அமைந்துள்ளதால், இந்த ரயில்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிலையில், காட்பாடி ரயில் நிலையத்தை  மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையை சேர்ந்த இன்ஜினியரிங் ப்ராடக்ட் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துக்கு 329.32 கோடி ரூபாய் கடந்த செப்டம்பர் 29ம் தேதியன்று வழங்கப்பட்டது. திட்ட மேலாண்மைப் பணிகளை குர்கானை சேர்ந்த வோயான்ட்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 7.89 கோடி ரூபாய். இந்த மறுசீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணியின் நோக்கம்: ரயில் நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை மேம்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரயில் நிலையக் கட்டிடம் 2 கட்டங்களாக இடிக்கப்பட்டு, அனைத்தும் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படும். தெற்குப் பக்கத்தில், ரயில் நிலையத்துக்கு வரும் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளைப் பிரிப்பதற்காக ஒரு தனி நுழைவு பகுதியும், வெளியே செல்லும் பகுதியும் கட்டப்படும்.

வடக்குப் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய முனையம் கட்டப்படும். அனைத்து கட்டடங்களும் காட்பாடி - வேலூர் கோட்டை நகரத்தின் தழுவலோடு, தொன்மை மாறாமல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், அதே நேரத்தில் புதிய தொழில்நுட்ப கட்டிட கலையுடன் அமைய உள்ளது. மேலும், தெற்குப் பகுதியில் அமைய உள்ள  கட்டிடத்தில் தாழ்தள பால்கனி உடன் 4 மாடியுடன் 10,250 ச. மீ.,ல் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படும். தரை தளத்தில் பயணிகளுக்கு இடவசதியும், புறப்பாடு பகுதி, உதவி மையம், ஏசி காத்திருப்பு அறை, முன்பதிவு மற்றும் பயணச் சீட்டு அலுவலகங்கள், எஸ்கலேட்டர், மின் தூக்கிகள், மற்றும் பால்கனி தளத்தில் ஓய்வறைகள் இருக்கும். முதல் தளத்தில் ஏசி மற்றும் ஏசி அல்லாத காத்திருப்பு அறை, பொருட்கள் வைப்பு அறை மற்றும் ரயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.  

இரண்டாவது தளத்தில் பெண்கள் காத்திருப்பு அறை, ஏசி அல்லாத காத்திருப்பு அறை, குழந்தை பராமரிப்பு மற்றும் வணிகப் பகுதி மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் வணிக நிறுவனங்கள் அமைய உள்ளன. இதுமட்டுமல்லாமல்,மற்றொரு பகுதியில் தாழ்தள பால்கனி வசதியுடன் 4 மாடியில் 10,250 சதுர மீட்டரில் அமைய உள்ளது. தாழ்தளத்தில் பயணிகளின் வசதிக்காக உதவி மையம், சுற்றுலா தகவல் மையம், பொருட்கள் வைப்பறை மற்றும் ரயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன. இதன் முதல் தளத்தில் பல்வேறு ரயில்வே அலுவலகங்களும் மற்ற மூன்று தளங்களும் வணிக நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நுழைவு மற்றும் வெளியே செல்லும் முனையங்களை இணைப்பதற்காக இரு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுத்தளங்கள்: வருகை மற்றும் புறப்பாடு பயணிகளை பிரிப்பதற்காக 2 பொதுத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை வருகை முனையத்திலிருந்து அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனையத்தை இணைக்கும்.  அனைத்து நடைமேடைகளிலும் போதுமான அளவு எஸ்கலேட்டர், மின் தூக்கி, படி வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு பொது தளங்களும் பயணிகளுக்கான வசதிகளுடன் நடைமேடைகள் பயணிகளுக்கு எளிதில் புலப்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. வடக்கு முனையம் : தரை தளத்தில் 600 சதுர மீட்டரில் அமைய உள்ள வடக்கு முனையத்தில் பயணச்சீட்டு மையம், புறப்பாட்டு பகுதி ஆகியவற்றுடன் அமைய உள்ளது.

வடக்கு முனையத்தின் முன் பகுதி 300 சதுர மீட்டரில் அமைய உள்ளது. வடக்கு முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதியாக இது அமைய உள்ளது. இந்த பகுதியில் வாகனங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்கான வசதிகளும் அமைய உள்ளது. பன்னடுக்கு கார் பார்க்கிங்: பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி 6 மாடியுடன் 9250 சதுர கிலோ மீட்டரில் பிரமாண்டமாக அமையுள்ளது. இதில் 258 கார்கள், 2120 இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ள முடியும். புறப்பட்டு முனையத்திலிருந்து கார் பார்க்கிங் வருவதற்கு அகலமான சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: