வேளச்சேரி: தரமணியில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் உள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் பயிற்சிக்காக மாணவர்கள் தயாரிக்கும் படங்களை திரையிட ஆர்.ஆர்.திரையரங்கு உள்ளது. இதில் நேற்று காலை மாணவர்கள் தாங்கள் தயாரித்த திரைப்படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடி இருந்தனர்.
இந்நிலையில் காலை 10.30 மணியளவில் தெர்மாகோலால் ஆன மேற்கூரை (பால் சீலிங்) திடீரென உடைந்து விழுந்தது. இதனால் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக திரையின் அருகில் இருந்த தெர்மோகோல் மேற்கூரை மட்டும் பெயர்ந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழக நினைவகம் இணை இயக்குனர் தமிழ் செல்வராஜன், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.