கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: கட்டிட தொழிலாளர் சங்கம் முதல்வருக்கு கடிதம்

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பென்சன் உதவி தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து, 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொது செயலாளர் எம்.பன்னீர் செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கட்டிட மற்றும் அமைப்புசார தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பென்சன் சுமார் 84 ஆயிரம் பேருக்கு 6 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ளது. கட்டுமானம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பென்சன் உதவி தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து கொண்டு வருகிறார்கள். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள், உற்பத்தியாளர்கள், கட்டுமான தொழிற்சங்க தலைவர்கள் கொண்ட முத்தரப்பு குழு ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: