கொரோனா காலத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 40 லட்சம் வழக்குகள் விசாரணை: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பெருமிதம்

சென்னை: கொரோனா காலத்தில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக இந்தியாவில் 64 லட்சம்  வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் 40  லட்சம் வழக்குகளை விசாரித்துள்ளது என்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகடமியில் (மாநில நீதித்துறை பயிற்சி மையம்) தேசிய நீதித்துறை பயிலகம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகடமி சார்பில் ‘தற்கால நீதித்துறை வளர்ச்சிகள் மற்றும் சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நீதியை பலப்படுத்துதல்’ தொடர்பான 2 நாட்கள் கருத்தரங்கின் தொடக்கவிழா இன்று நடந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி அபய் னிவாஸ் ஒகா கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன், தேசிய நீதித்துறை அகாடமி இயக்குநர் நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தென்மாநில உயர் நீதிமன்றங்களின் 24 நீதிபதிகள், 80 மாவட்ட நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பேசும்போது, ‘உலகில் உள்ள நீதித்துறைகளில் இந்திய நீதித்துறை சிறந்த நீதித்துறையாக செயல்படுகிறது. கடந்த 2016 முதல் 2022 வரை கொரோனா காலகட்டத்திலும் இந்தியாவில் 10 கோடி வழக்குகள் பதிவாகின. அவற்றில் 9 கோடி வழக்குகள் இந்திய நீதித்துறையால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசும்போது, ‘தேசிய நீதித்துறை பயிலகம், தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகடமி மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது. கொரோனா காலத்தில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக இந்தியாவில் 64 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் 40 லட்சம் வழக்குகளை விசாரித்துள்ளது.

தமிழ்நாடு மாநில ஜூடிசியல் தமிழ்நாடு மற்றும் தென்மண்டல மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதில் உலகத்திற்கு முன் மாதிரியாக திகழ்கிறது’ என்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென் மண்டலங்களை சேர்ந்த மாவட்ட நீதிபதிகளுக்கு பல்வேறு சட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: