ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இறுதி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இறுதி கட்ட பிரசாரம் செய்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததையொட்டி, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (27ம் தேதி) நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் 238 வாக்குச்சாவடிகளிலும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொகுதி முழுவதும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, திருச்சி சிவா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொதுச்செயலாளர் தினேஷ் குண்டுராவ், ப.சிதம்பரம் எம்.பி., மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தனர்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்கட்ட பிரசாரம் செய்தார். நேற்று அவர் 2ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. பிரசாரத்தின் இறுதிநாள் என்பதால் தொகுதி முழுவதும் இன்று தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார். இன்று காலை 9 மணிக்கு சம்பத்நகர், காந்திசிலை மற்றும் பி.பெ.அக்ரஹாரம்  ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர் மதியம் முனிசிபல் காலனி,  பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்று இறுதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளதையடுத்து வெளியூர் நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை நடத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

* நாளை மறுநாள் (27ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.

* மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

Related Stories: