திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உரக்கடைகளில் உரம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உரங்களுடன் பிற பூச்சிக்கொல்லிகளை வாங்க விவசாயிகளை வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உரிமம் இல்லை என்பது தெரியவந்தது. ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒருமுறை புதுப்பித்திருக்க வேண்டும்.
அப்படி செய்யாததால், அதற்கான உரிமம் புதுப்பிக்குமாறும், உர உரிமம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் அங்கு உர இருப்பு வைத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள விவாசயிகள் எளிதில் பயன்பெற உதவுமாறும் அறிவுரை வழங்கினார். பின், தனியார் உரக்கடையிலும் ஆய்வு செய்தார். அங்கு உர உரிமம், இருப்பு பதிவேடு, விற்பனை விலை குறித்த தகவல் பலகை மற்றும் விற்பனை முனைய கருவி சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதில் உரம் அதிக விலைக்கு விற்கிறதா? எனவும், பிற பொருட்கள் எதுவும் வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறஹா எனவும் ஆய்வு செய்தார்.
மேலும், எடை தராசு முத்திரை புதுப்பிக்க அனுப்பப்பட்டதால், முத்திரை புதுப்பித்த பின்னர் வேளாண் அலுவலரின் ஆய்வுக்கு தகவல் வழங்குமாறு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து, புலியூர் விதை பண்ணையிலும் ஆய்வு நடத்தினார். அங்கு வம்பன் 4 ரக பச்சைப்பயிறு விதைக்கப்பட்டிருந்தது. இது மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய இரகமாகும். அருகில் இருந்த மற்ற விவசாயிகளின் நிலங்களையும் ஆய்வு செய்தார். அந்த விவசாயிகள் கோ-7 ரக பச்சைப்பயறு செய்திருந்தனர். அது மஞ்சம் தேமல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இது வெள்ளை ஈயால் பரவக்கூடியநோய் என கண்டறியப்பட்டது. அதனால் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு டைமேத்தோட் 30 இசியும் அல்லது மிதைல் டெமாட்டான் ஒரு ஏக்கருக்கு 25 சதவிகித இ.சி 200 மிலி என தெளிக்கவேண்டும் எனவும் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்தார்.