கொடூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பசுமை வீடுகள் கட்டும் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

செய்யூர்: கொடூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான பணிக்கான துவக்க விழா நடந்தது. அதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு பங்கேற்று அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் லத்தூர் ஒன்றியம் கொடூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் ஏரிக்கரையோரங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 36 குடும்பங்கள் நீர்நிலை பகுதிகளில் சிறு சிறு குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர், மின் இணைப்பு, சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வைத்துக்கொண்டு பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வந்தனர்.

இவர்களுக்கென தனி நிலம் ஒதுக்கி அங்கு வீடுகள் கட்டிதர வேண்டும் என இவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. திமுக ஆட்சி பொறுப்பெற்றதை தொடர்ந்து செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று கொடூர் ஊராட்சி ஆச்சிவிளாகம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு என பசுமை வீடுகள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2வது கட்டமாக 36 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன் தினம் நடந்தது. இதில், கொடூர் ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியக்கோட்டி தலைமை தாங்கினார். லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு மற்றும் துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசுமை வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதில், செய்யூர் வட்டாட்சியர் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வகுமார், ஊராட்சி துணை தலைவர் தனலட்சுமி ரவீந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆச்சிவிளாகம் பகுதியில் 50 திருநங்கை குடும்பங்களுக்கு ஏற்கனவே பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

Related Stories: