மணமை கிராமத்தில் ஆதிதிராவிடர், இருளர்களுக்கு வீட்டு மனைப்பட்ட வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை மனு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு இருளர், ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில் 7வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருளர்கள், ஆதிதிராவிடர் மக்கள் என 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள், 40 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு வீட்டுமனைக்கான பட்டா வழங்க தாசில்தார், ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு கொடுத்தனர்.

ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மணமை கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக வந்தனர். பின்னர், அவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திடம் மனு அளித்தனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மணமை 7வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை பட்டா கேட்டு மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஒரு சிலர் மின் இணைப்பு பெற முடியாமலும், தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகள் பெற முடியாமல் சிரமமடைந்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: