மாடு மிதித்து உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய காவலர் தலைமை செயலாளர் பாராட்டு

சென்னை: மாடு மிதித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய பெரியபாளையம் காவல் நிலைய முதல்நிலை காவலரை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில், காவலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பில் ‘அன்பான அணுகுமுறை’ முன்னோடி பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது பயிற்சியில் பெரியபாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலர் ச.கங்கன் சமீபத்தில் கலந்துகொண்டார். இவர், திருவள்ளூர் மாவட்டம், ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்.

சில தினங்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டம், ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோகிலா (60) என்பவரை மாடு மிதித்து மூச்சுப் பேச்சே இன்றி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை சுமார் 500 மீட்டர் தூரம் தோளில் சுமந்து, மெயின் ரோட்டுக்கு கொண்டு சென்று, உள்ளங்கை உள்ளங்கால் சூடு பறக்க தேய்த்தும், இதயம் அருகே விட்டு விட்டு அழுத்தம் கொடுத்தும், மூச்சு வரவைத்தார். பின்னர் தனது இரு சக்கர வாகனத்தில் செந்தில்குமார் என்பவர் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்கள் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்தார். தனக்கு அளிக்கப்பட்ட சிறிய ஓய்வு நேரத்தில் ஓர் உயிரை காப்பாற்ற காரணமாக இருந்த முதல் நிலை காவலர் ச.கங்கனை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று நேரில் அழைத்து புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: