மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும்: பெற்றோர் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, கூடுதல் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 185 மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 140 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகளிர் உயர்நிலை பள்ளியில் தற்போது 8 கழிப்பறைகள் உள்ளன. இவற்றில், 5 கழிப்பறைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 3 கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்து உள்ளது. இதன் காரணமாக, மாணவிகள் தங்களின் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பகல் பாடவேளையில் 15 நிமிடம் மட்டுமே இடைவேளை விடப்படுகிறது. இந்த 15 நிமிடத்திற்குள் 185 மாணவிகளும் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆனவே, கூடுதல் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பிலும், பள்ளி மேலாண்மை குழு சார்பிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லாததால் கூடுதல் கழிப்பறை கட்டும் பணி தள்ளிப்போகிறது. எனவே, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று மாணவிகளில் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: