எருமாபாளையத்தில் ₹21.31 கோடியில் பசுமை தளமாக மாறும் குப்பைமேடு பணியை விரைந்து முடிக்க உத்தரவு

*பராமரிப்பு இல்லாததால் காய்ந்து கிடக்கும் புல் தளங்கள்

சேலம் : சேலம் எருமபாளையத்தில் ₹21.31 கோடியில் பசுமை தளமாக மாற்றம் செய்யப்படும் குப்பை மேடு பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹1000 கோடியில் 80க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 40க்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துள்ளது. மீதியுள்ள பணிகளான ₹92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட், ₹21 கோடியில் எருமாபாளையம் குப்பை மேட்டை பசுமை பூங்கவாக மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ₹21.31 கோடியில் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கினை நவீன முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. குப்பை மேடு 7.90 ஏக்கர் நிலப்பரப்பில் 3 தளங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கான இருக்கை வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது. இப் பணி ₹21.31 கோடியில் நடந்து வருகிறது.

இப்பணியை அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தும், இப்பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பை மேட்டில் பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தி பசுமையான புல் தளங்களும், பொது மக்கள் நடந்து செல்லும் வகையில் சாலை வசதி அமைக்கப்பட்டிருந்தது. புல்களுக்கு தண்ணீர் விட்டு பசுமையாக காட்சியளித்தது.

தற்போது வெயில் தொடங்கியுள்ளதால் பசுமை பூங்காக காட்சி அளித்த புல் தளங்கள் காய்ந்து கிடக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாததாலும், தண்ணீர் விடாததாலும் புல் தளங்கள் காய்ந்து உள்ளன. இருப்பினும் இந்த பணி இன்னும் நிறைவடையாத நிலையில் உள்ளது. விரைந்து பணியை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர், கமிஷனர் உத்தரவிட்டுள்ளனர்.   

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ்  கூறுகையில், ‘‘எருமாபாளையம் குப்பை மேட்டில் தரைமட்டத்திலிருந்து, 7.9 ஏக்கர் பரப்பளவில் 10 மீட்டர் உயரத்திற்கு உபயோகமற்ற பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தப்படுகிறது. தரைப்பகுதி சமன்படுத்துதல், புல் தளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் அமைக்கப்பட்டுள்ளது. பசுமைபூங்கா அமைக்கும் இன்னும் முடியவில்லை. பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது,  என்றார்.

Related Stories: