கோவையை அலறவிட்ட மக்னா யானை பிடிபட்டது

கோவை: கோவையை அலறவிட்ட மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நேற்று முன்தினம் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிக்கு வந்தது. ஊருக்குள் புகுந்த யானை ஒரு வீட்டில் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது. வனத்துறை வாகனம் ஒன்றை சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறிது ஓய்வு எடுத்த யானை நள்ளிரவில் குனியமுத்தூர் பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்தனர். இதற்காக தயார் நிலையில் மருத்துவக்குழுவினர் இருந்தனர்.

மக்னா யானையை பிடிக்க கும்கி யானை சின்னதம்பியும் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். மொத்தம் 4 மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து யானை அருகே உள்ள வாழை தோட்டத்தில் புகுந்தது. பின்னர், வனத்துறையினர் கும்கி யானை சின்னதம்பி மற்றும் ஜேசிபி உதவியுடன் மயக்க நிலையில் இருந்த மக்னா யானையை பிடித்து லாரியில் ஏற்றினர். இந்த யானையை அடர் வனத்தில் கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். மேலும், யானையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டு உள்ளது.

Related Stories: