போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக டிவிட்டரில் வந்த புகார்களின் மீது 90.5% நடவடிக்கை: மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தகவல்

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது, பொதுமக்கள் டிவிட்டர் மூலம் அளித்த 1,267 புகார்களில், 90.5 விழுக்காடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் தெரிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில், பொதுமக்கள் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்க 90031 30103 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டது. தற்போது, மாநகர போக்குவரத்து டிவிட்டர் பக்கத்தில் 10,400 பதிவுகள் வந்துள்ளது. டிவிட்டர் பக்கத்தை தற்போது 69,162 பேர் பின் தொடர்கிறார்கள். அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் டிவிட்டர் மூலம் 1,267 விதிமீறல்கள் போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு வந்தது. அதில் 90.5 விழுக்காடு புகார்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதேபோல், மாநகர போக்குவரத்து போலீசாரின் பேஸ்புக் பக்கத்தை 1,01,734 பேர் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தை 5,256 பேர் பின் தொடர்கிறார்கள். இதனால் போக்குவரத்து போலீசார் சார்பில், விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவு செய்து வருகிறோம். வாட்ஸ் அப் மூலம் கடந்த 2022ல், மொத்தம் 2,062 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில், தற்போது வரை 669 புகார்கள் பெற்றப்பட்டு அவற்றில் 659க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிசிடிவி மற்றும் ஏஎன்பிஆர் என்ற ‘மூன்றாவது கண்’ மற்றும் சமூக ஊடகத்தை ‘நான்காவது கண்’ என பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விழிப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கூறினார்.

Related Stories: