கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க கல்வித்துறை நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில்  இருக்கிறது. முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளையும்  பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.100 சதவீத படிப்பறிவு, பள்ளிப் படிப்பறிவு, கல்லூரிப் படிப்பு என்பதை  நாம் நிச்சயமாக எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக  வேண்டும். கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழா, நேற்று காலை நடந்தது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அந்த பள்ளியில் படித்து தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவியருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கிப் பேசியதாவது: வித்யோதயா பள்ளி, சென்னையில் மிக மிக முக்கியமான பள்ளி மட்டுமல்ல, இது ஒரு பாரம்பரியமான பள்ளி. சென்னையில் எத்தனையோ பள்ளிகள் இருக்கலாம், ஆனால் நூற்றாண்டு காணக்கூடிய பள்ளிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குதான் நாம் பார்க்கமுடியும்.

அப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில், நூற்றாண்டு விழாவைக் காணக்கூடிய இந்த வித்யோதயா பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறபோது நான் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.  இந்தப் பள்ளி 1924ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  அந்த ஆண்டுக்கு இன்னொரு முக்கியமான பெருமை உண்டு. அது என்னவென்றால், அதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஆண்டு. தலைவர் கலைஞரை பொறுத்தவரைக்கும், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துவிட்டு, அவருக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட அரசியல் ஈடுபாட்டின் காரணமாக உயர் கல்விக்கு அவர் செல்லவில்லை.  கல்லூரியைக் காணாத கலைஞர். ஆனால், எத்தனையோ கல்லூரிகளை, எத்தனையோ பல்கலைக்கழகங்களை தமிழ்நாட்டில்  அவர் உருவாக்கியிருக்கிறார். இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு சிற்பியாக அவர் விளங்கியவர். அவர் பிறந்த ஆண்டில்தான் இந்தப் பள்ளி உருவானது.  

அப்படி உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியானது, இன்றைக்கு 100 ஆண்டை கண்டு இதில் பல்லாயிரக்கணக்கான மாணவியரை உருவாக்கியிருக்கிறது. பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கவேண்டும்; போராடி உரிமைகளைப் பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து அந்த உரிமைகளைத் திரும்பப் பறிக்கவேண்டும் என்று  நினைக்கிறார்கள். அவர்களுடைய இந்த பிழைப்புவாத கருத்துகளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, நீங்கள் நன்றாக படியுங்கள். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், ‘கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து’. அந்தக் கல்விச் சொத்தை நீங்கள் அடையக் கூடாது என்று திட்டம் போடுபவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறக் கூடாது. நிச்சயம் நிறைவேறாது. சேவை மற்றும் தியாகம் என்பதை லட்சியமாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி.  அனைவருக்கும் கல்வி வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிச்சயமாக கல்வி வேண்டும். அதேபோல், அது மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அது அமைய வேண்டும். அத்தகைய கல்வியை உருவாக்கித் தரக்கூடிய பள்ளியாக இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.

இத்தனை ஆண்டு காலம் நீடித்து நிலைப்பதற்கு உண்மையான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும். தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் எழிலன், பெருமையோடு பட்டியல் போட்டு எடுத்துச் சொன்னார்.  இல்லம் தேடிக் கல்வி,  நான் முதல்வன்,  பள்ளி மேலாண்மைக் குழுக்கள்,  பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி,  சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி,  1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்,  9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்,  மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்,  வகுப்பறை உற்று நோக்கு செயலி,  மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி - ஆகிய திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தி வருகிறோம்.

இது அரசுப் பள்ளிகளுக்கும் மட்டுமல்ல, அனைத்துப் பள்ளிகளுக்குமானது. இதுபோன்ற புதிய புதிய செயல்திட்டங்களை ஆர்வத்துடன் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதில் “நான் முதல்வன்” என்ற திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது.  இதனுடைய பயன் என்பது ஓராண்டில் - ஐந்தாண்டில் முடிவடைவடையக் கூடியதல்ல. தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்கு நம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பயன்படக்கூடிய திட்டமாக அது அமைந்திருக்கிறது. 100 சதவீதப் படிப்பறிவு, பள்ளிப் படிப்பறிவு, கல்லூரிப் படிப்பு என்பதை நாம் நிச்சயமாக எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும்.

இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். பள்ளியோடு கல்வியை நிறுத்திவிடாமல் கல்லூரிகளுக்கும் அவர்கள் செல்ல வேண்டும். கல்விக்குத் தகுந்த வேலைகளில் சேர வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பல்வேறு நிலைகளில் தங்களது திறமைக்கு ஏற்ற பணிகளில் அவர்கள் இயங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதுதான் உங்களை உருவாக்கிய இந்தப் பள்ளிக்கு பெருமையை சேர்த்திட முடியும். பள்ளிக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்திற்கும் பெருமை கிடைக்கும். உங்களது சேவையும் தியாகமும் எந்நாளும் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: