சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75. சமீபத்தில் 5 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதையடுத்து தற்போது 57 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 18 இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணனை புதிய கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. லட்சுமி நாராயணன் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.
சென்னை எம்.சிடி. முத்தையா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பையும், பெங்களூரு நேசனல் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தவர். மெட்ராஸ் லா புத்தகத்தின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். சிவில், கிரிமினல், ரிட், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட வழக்குகளில் ஆஜராகி வருபவர். தமிழ்நாடு வக்பு வாரிய, இந்திய மருந்து நிறுவனம், மத்திய கிட்டங்கி கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தேசிய சுகாதார மிஷன் ஆகிய அமைப்புகளின் வழக்கறிஞராக பணியாற்றிவந்துள்ளார். இவர் 250க்கும் மேற்பட்ட சட்ட இதழ்களில் பதிவேற்றப்பட்ட வழக்குகளில் ஆஜரானவர்.இவருக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.