இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பூந்தமல்லி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 20 மண்டலங்களில் 25 ஜோடிகள் வீதம் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும். இதற்கான செலவுகளை கோயில்களே ஏற்கும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் 9 ஜோடிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில், வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் ஜெயப்பிரியா முன்னிலையில் திருமணங்கள் நடந்தது. நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், கோயில் அறங்காவலர் குழு தலைவர் என்.கே.மூர்த்தி, அறங்காவலர்கள் சந்திரசேகர செட்டி, கோவிந்தசாமி, வளர்மதி, சாந்தகுமார், திருமண வீட்டார் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்கு திருமாங்கல்யம், ஆடைகள், மாலை, பீரோ, கட்டில் போன்ற சீர்வரிசை பொருட்கள், விருந்து உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

Related Stories: