ஒருவழிப்பாதையில் சென்றதாக 53 நாட்களில் 60,181 வாகன ஓட்டிகளிடம் ரூ.1.31 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வழிப்பாதை மற்றும் தவறான வழியில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த திங்கள் முதல் புதன் வரை 3 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு தணிக்கையில், சாலைகளில் விதிகளை மீறி ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டியதாக 15,239 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.51.27 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 53 நாட்களில் மாநகரம் முழுவதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டியதாக 60,181 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதமாக 1 கோடியே 31 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: