பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கவர்னர் ரவிக்கு மார்க்சிஸ்ட் கருப்புக்கொடி: சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தெற்கு வீதியில் நேற்று இரவு நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பங்கேற்று, பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 6.30 மணி அளவில் ரவி மற்றும் துணைவியார் லட்சுமி ரவி ஆகியோர் நடராஜர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தத்துவமேதை காரல் மார்க்சை குற்றம் சாட்டி பேசிய கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் ஆன்லைன் தடை சட்ட மசோதா உள்பட மாநில அரசின் பல சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்கும் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும்  இன்று காலை 8.30 மணி அளவில் சிதம்பரம் தெற்குவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் கருப்புக்கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் முகவராக செயல்படும் ஆளுநர் ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். கட்சி நிர்வாகிகள் ரமேஷ்பாபு, மூசா, ராஜா ஆகியோர் தலைமையில் ஆண்கள், பெண்கள் உள்பட 100க்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வழியே கவர்னர் வருகை தர இருந்ததால்  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விருந்தினர் மாளிகைளில் இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து காலை 9.30 மணி அளவில் சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா ஜீவ சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, பின்னர் அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிதுநேரம் ஓய்வெடுத்து விட்டு காலை 10.15 மணி அளவில் காரில் சென்னை புறப்பட்டு சென்றார்.

Related Stories: