உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இனி அதிமுகவை கைப்பற்ற வாய்ப்பில்லை: சசிகலாவுடன் இணைந்து ஓபிஎஸ் தனிக்கட்சி?...

சென்னை: உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பால் அதிமுகவை இனி கைப்பற்ற வாய்ப்பில்லை என்பதால், சசிகலாவுடன் இணைந்து தனிக்கட்சி தொடங்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என்பதுடன், அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பால் எடப்பாடி அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதேநேரம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதிமுக கட்சிக்குள் இனி ஓபிஎஸ் தலையிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு நிலையால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் தனது அரசியல் பயணத்தை தொடரவும், எடப்பாடி அணியினரை எதிர்க்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினால் மட்டுமே முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் ஓபிஎஸ் தனித்து செயல்பட்டபோது, சசிகலா அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றே தெரிவிக்கப்பட்டது.

மேலும், சசிகலாவுடன் ஓபிஎஸ் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இருவரும் தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து புதிய கட்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சட்ட ஆலோசனைகளையும் பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சசிகலாவும் தனது ஆதரவாளர்களுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதில், பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதனால் கடைசி வாய்ப்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட பன்னீர்செல்வம் தரப்பினருக்கு சசிகலா அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் முறையிட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக இருவரும் காத்திருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கியது.  

ஆனால் இது தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவு இல்லை. தற்போது உச்சநீதிமன்றம் பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என்று கூறி உள்ளதால் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாமா அல்லது தனிக்கட்சி தொடங்கலாமா என்றும் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓரிரு நாளில் பன்னீர்செல்வம் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: