இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்களா?.. டிடிவி தினகரன்

திருச்சி: எடப்பாடி பழனிசாமியின் வெற்றி தற்போதையது தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமானது. இந்நிலையில் இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக வெற்றி தான். இரட்டை இலை அவரிடம் சென்றால் அது அ.தி.மு.க வை மேலும் பலவீனப்படுத்தும். தர்ம யுத்தம் 1 ல் ஒ.பி.எஸ் வெற்றி பெற்றார், தர்ம யுத்தம் 2ல் அவருக்கு சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு தேர்தலில் வென்றுவிடுவார்களா? ஏற்கனவே இரட்டை இலையோட சட்டமன்ற தேர்தல்ல ஆட்சி அதிகாரம், பண பலத்தோட போட்டியிட்டப்போது கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. 2017 ஏப்ரலில் இருந்து டெல்லி தானே அதிமுகவை இயக்குகிறது. அது உண்மை தானே. அதிமுக பொதுக்குழுவின் தீர்ப்புக்கும், அமமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. அமமுக தொடர்ந்து பயணிக்கும் என்று கூறினார்.

Related Stories: