வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பால் நடவடிக்கை கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றும் மாடுகளை பிடிக்க மீண்டும் எதிர்ப்பு: மாநகராட்சி அதிகாரிகளுடன் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மற்றும் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை கணக்கெடுத்து காதில் டேக் போட வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மாடு உரிமையாளருக்கும் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஒரு வாரம் அவகாசம் கொடுத்ததால் மாடு உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறிகளை வளாகத்தில் வியாபாரிகள் கொட்டுகின்றனர். இவற்றை சாப்பிட மதுரவாயல், கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட எருமை மற்றும் பசு மாடுகள் வந்து செல்கின்றன.

இதனால் காய்கறிகள் வியாபாரம் செய்யும் பகுதிகளில் மாடுகள் உள்ளே புகுந்து ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு மிரண்டு ஓடுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி அன்று கோயம்பேடு அங்காடி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அங்காடி நிர்வாக அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள், மாடுகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ‘‘கோயம்பேடு மார்க்கெட் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டுள்ளன. எனவே மார்க்கெட்டில் மாடுகள் உள்ளே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. மாடுகளை உரிமையாளர்கள் தங்களது இடத்தில் கட்டி வைத்துக்கொள்ள 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இதை மீறி மார்க்கெட்டில் மாடுகளை விட்டால் அந்த மாடுகள் ஏலம் விடப்படும்’’ என மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மற்றும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கணக்கெடுத்து மாடுகளின் காதில் டேக் போட நேற்று சென்னை மாநகராட்சி டாக்டர் ஜெகதீசன் தலைமையில் அதிகாரிகள் வந்தபோது, இதை கேள்விப்பட்ட மாடு உரிமையாளர்கள், ‘இன்னும் எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்க வேண்டும்’ எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கோயம்பேடு காவல் உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்புக்கு வந்தனர். பின்னர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாடு உரிமையாளர்களிடம் வாக்குவாதம் நீடித்ததால் மாநகராட்சி அதிகாரிகள், ஒரு வாரம் அவகாசம் கொடுத்த பிறகு மாடு உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: