கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு: மல்லி, ஜாதி மல்லி, முல்லை தலா ரூ.500க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையிலும் கடும் சரிவு காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி, முல்லை, ஜாதி மல்லி தலா ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.400க்கும், அரளி பூ ரூ.150க்கும் விற்பனையானது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ஐஸ் மல்லி ரூ.800, மல்லி ரூ.1,300, முல்லை ரூ.1,000, கனகாம்பரம் ரூ.800, ஜாதிமல்லி ரூ.1,000, பன்னீர்ரோஸ் ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.120, சாமந்தி ரூ.140, சமபங்கி ரூ.80, அரளி பூ ரூ.350க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை அனைத்து பூக்களின் விலையிலும் கடும் சரிவு ஏற்பட்டது. ஒரு கிலோ ஐஸ் மல்லி ரூ.500, மல்லி ரூ.700, முல்லை ரூ.500, ஜாதிமல்லி ரூ.500, கனகாம்பரம் ரூ.400, பன்னீர் ரோஸ் ரூ.50, சாக்லேட் ரோஸ் ரூ.60, சாமந்தி ரூ.70, சமபங்கி ரூ.60, அரளி பூ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘நாளை (இன்று) முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், திடீரென்று அனைத்து பூக்களின் விலையும் கடும் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைவால் சென்னை புறநகர் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் பூக்களை வாங்கி சென்றனர்’’ என்றார்.

Related Stories: