இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்சக்கட்ட பிரசாரம்: திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் முகாம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வருகிற 25ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் திமுக, அதிமுக மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து வருகிற 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு மற்றும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது.

முன்னதாக 25ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இதனால் திமுக, அதிமுக மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். அதேபோன்று திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நேரடியாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 25ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து, அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரித்தார். அதேபோன்று முன்னாள் அதிமுக அமைச்சர்கள், தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தனது 2வது கட்ட பிரசாரத்தை வருகிற 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறார். தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய் பிரபாகர் ஆகியோரும் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 25ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைவதால் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 20ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் ஓபிஎஸ் அங்கு பிரசாரத்துக்கு செல்லமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஈரோடு பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் தங்கள் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: