ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை-துணை முதல்வர் பேட்டி

சித்தூர் :  ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என்று துணை முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

சித்தூர் மாவட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மகன் நாராலோகேஷ் ‘யுவ களம்’ என பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாதயாத்திரை தோல்வி அடைந்துள்ளது. அவர் பாதயாத்திரையில் முதல்வர் ெஜகன்மோகனையும், ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களையும் அவதூறாக பேசி வருகிறார்.

வாய் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என அவர் நினைக்கிறார். முதல்வர் ஜெகன்மோகன் கடந்த 2015ம் ஆண்டு மாநில முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது, ‘நவ ரத்தினம்’ என்கிற நலத்திட்டத்தை மக்களுக்கு அறிவித்தார். மொத்தம் 850 வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். முதல்வரானவுடன்  அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்று விடாமல் 3 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டார். ஆனால், நாரா லோகேஷ் பாதயாத்திரையின் போது ஒரு வாக்குறுதி கூட வழங்கவில்லை.  

முன்னாள் முதல்வர் சந்திரபாபு சித்தூர் மாவட்டத்தில் ஒரு நலத்திட்ட பணிகள் கூட செய்யவில்லை. ஆனால், முதல்வர் ெஜகன்மோகன் சித்தூர் மாவட்டத்தில் பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், 4 வழி சாலைகள், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்ச்சாலை, சித்தூர்-தச்சூர் 4 வழிசாலை அமைத்து பொதுமக்கள் பயனடைய பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்.

‘நாடு நேடு’ திட்டத்தின் கீழ் பழைய அரசு பள்ளிகளை புதுப்பித்து கார்ப்ரேட் பள்ளிகளுக்கு இணையாக மாற்றி வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு ₹15 ஆயிரம் ‘அம்மா ஓடி’ திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறார். இதனால், பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தரமான சீருடைகள், பாட புத்தகங்கள், பேக், ஷூ உள்ளிட்டவை வழங்கி வருகிறார்.  

முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை.

அவரது ஆட்சியில் செம்மரக்கட்டை கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்டவை அதிகளவு நடந்தது. எங்களது ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. நாரா லோகேஷ் ஆளும் கட்சியினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். வருகிற 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும். மீண்டும் முதல்வராக ெஜகன்மோகன் பதவி ஏற்பார்.

தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் எம்எல்சி தேர்தலில் மொத்தம் 18 எம்எல்சி பதிவுகளுக்கு 11 எம்எல்சி பதிவுகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கி உள்ளார். அதேபோல், எஸ்சி எஸ்டிபிசி மைனாரிட்டி உள்ளிட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். இது தெரியாமல் எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடையே வதந்திகள் பரப்பு வருகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார். அப்போது சித்தூர் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு, பலமநேர் எம்எல்ஏ வெங்கடசவுடு, எம்எல்சி பரத், மேயர் அமுதா, பிசி சேர்மன் சுரேஷ், போக்குவரத்து துறை சேர்மன் விஜயகாந்த், சுடா சேர்மன் புருஷோத்தம், மார்க்கெட் கமிட்டி சேர்மன் ராகுல் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: