சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று ஆலோசனை: ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவது, திட்டங்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது

சென்னை: சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். சென்னை கோட்டம் ரயில்வே திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த எம்பிக்களான தயாநிதி மாறன், தமிழச்சி  தங்கப்பாண்டியன், கலாநிதி வீரசாமி மற்றும்  சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கலந்து  கொள்கின்றனர். சென்னை ரயில்வே கோட்டத்தில் 18 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல், ஆவடி, தாம்பரம் ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது.   இதுதவிர, அம்ரித் பாரத் ரயில்நிலைய திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, திருத்தணி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்குரூ.11,314 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய பாதை, அகலப்பாதை, இரட்டை பாதை என பல்வேறு திட்ட பணிகளுக்கு மட்டும்ரூ.6080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.  இதுதவிர, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய ரயில்நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என அப்போது எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.  தொடர்ந்து சேலம் கோட்டத்தில் வருகிற 23ம் தேதியும், திருவனந்தபுரம் கோட்டத்தில் மார்ச் 1ம் தேதியும், பாலக்காடு கோட்டத்தில் மார்ச் 2ம் தேதியும், மதுரை கோட்டத்தில் மார்ச் 8ம் தேதியும், திருச்சி கோட்டத்தில் மார்ச் 9ம் தேதியும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: