பொன்னேரி: ஊர் கட்டுப்பாட்டை மீறி மீன்பிடிக்க சென்றதும், படகு காணவில்லை என புகார் அளித்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் நடுவூர் மாதா குப்பத்தைச் சேர்ந்த சார்லஸ். இவருக்கு சொந்தமான படகில் தம்பிராஜ், ராபர்ட், பெரியநாயகம், லேவியர், சாம் ஆகிய ஐந்து பேர் கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு நேற்றுமுன்தினம் மதியம் கரைக்கு திரும்பினர். அப்போது, பழவேற்காடு மீன் விற்பனை அங்காடி அருகே கடலோர காவல்படை நிலையம் எதிரில் படகை நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்கச்சென்றுள்ளனர். அந்நேரம் பார்த்து, மர்மநபர்கள் 4 பேர் படகை எடுத்துச் சென்றுள்ளனர்.
டீ குடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் ஓடிச்சென்று பார்ப்பதற்குள் படகு சென்றுவிட்டது. இதனால், படகின் உரிமையாளரான சார்லஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே மீனவர் சார்லஸ், திருப்பாலைவனம் போலீசாரிடம் தனது படகு காணவில்லை என புகார் அளித்துள்ளார். விசாரணையில் நடுவூர் மாதா குப்பம் மீனவர்களின் மீன் பிரச்னை தொடர்பாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என கிராமத்தினர், ஊர் கட்டுப்பாடு போட்ட நிலையில், மீனவர் சார்லஸ் தரப்பினர் கடலுக்குள் சென்று மீன் பிடித்து பழவேற்காடு கடற்கரைக்கு வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, நடுவூர் மாதா குப்ப நிர்வாகிகள் மூலம் சாரலஸ்க்கு சொந்தமான மீன் பிடிப்படகை அப்பகுதியை சேர்ந்த மக்கள் எடுத்து வந்தது என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பேசுகையில், ஊர் கட்டுப்பாட்டு மீறி மீன்பிடிக்க கடலுக்கு சென்றதும், படகு காணவில்லை என பொய் புகார் கொடுத்ததும் தவறு. எனவே, இது போன்ற காரியங்களில் இனிமேல் ஈடுபட கூடாது என எச்சரித்து அனுப்பியாத தெரிவித்தனர்.