பூந்தமல்லி அருகே வரலாற்று சிறப்புமிக்க பார்வையற்றோர் அரசு பள்ளி அவலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூந்தமல்லி: வரலாற்று சிறப்பு மிக்க பார்வையற்றோர் அரசு பள்ளி அதிகாரிகள் மெத்தனதால் பராமரிப்பின்றி கிடக்கிறது.  பூந்தமல்லி கரையான்சாவடி அருகே தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சார்பு நிறுவனங்கள் உள்ளது. பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி கட்டடம், சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு ராணுவ பாசறையாகவும், விக்டோரியா மகாராணியின் மாளிகையாகவும் இருந்தது. ஒரு காலத்தில் நவாப்புகள், ஆங்கிலேயர்களின் ராணுவ படைப்பிரிவு பாசறையாகவும், பயிற்சி பெறும் இடமாகவும்,  புகழ் பெற்ற அரேபிய குதிரைகள் தங்க வைக்கும் இடமாகவும் இருந்தது.

உலகப் போரில் ஆங்கிலேயர்களின் வெற்றியை நினைவுகூறும் வகையில், விக்டரி மெமோரியல் பார்வையற்றோர் பள்ளி என இந்தப் பள்ளி 1931-ல் அப்போதைய ஆங்கிலேய அதிகாரி எரிக் கான்ரன் ஸ்மித் ஆலோசனையின்பேரில் ஆசியாவின் பார்வையற்றோருக்கான முதல் உயர்நிலைப் பள்ளியாக இங்கு தொடங்கப்பட்டது. மொத்தம் 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பள்ளி 1933-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 6 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசின் தேசிய பார்வையற்றோர் கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளி வரலாற்று சிறப்பு மிக்க பூந்தமல்லியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இந்த பள்ளி வளாகத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான தொழிற்பயிற்சி மையம், பெண்கள் மறு வாழ்வு இல்லம், பிரெய்லி அச்சகம், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம், ஒன்றிய அரசின் பார்வைக்குறைபாடு உள்ளவருக்கு கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சி மையம், நூலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன.  இந்தப் பள்ளியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இம்மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியடைந்து வருகின்றனர்.

நூற்றாண்டை கடந்த பழமையான கட்டடங்களை கொண்ட இந்தப் பள்ளியில் பராமரிப்பு இல்லை. மேலும் அடிப்படை வசதிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. சில வகுப்பறை மேற்கூரைகளில் மழை நீரில் ஒழுகுகிறது. பழுதாகும் மின் சாதனங்கள் உடனுக்குடன் சரி செய்வதில்லை. மேலும் மிகவும் பழமையான இந்த கட்டடத்தின் மேல் வெளிப்புறத்தில் ஆங்காங்கே செடி கொடிகள் முளைத்துள்ளன. பராமரிப்பு இல்லாததால் பள்ளி வளாகம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பாம்பு, பூரான் போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பார்வைக்குறைபாடுடைய இந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சுதந்திர தினம், குடியரசு தினம், தலைவர்களின் பிறந்த நாள் போன்ற நாட்களில் மட்டும் பள்ளி வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் வரும் போது மட்டும் கண்துடைப்பாக பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு இந்த மாணவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. போதிய பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி, பாழடைந்து  வருவது குறித்து இங்குள்ள மாணவர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நூறாண்டுகளுக்கு மேலு பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டடத்தினை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் விஷப்பூச்சிகளின் புகலிடமாக மாறி வரும் செடி கொடி புதரை அகற்ற வேண்டும், போதிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை விரிவு படுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: