திருப்போரூர் - சிறுதாவூர் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் - சிறுதாவூர் இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் சாலை வரை 22 கி.மீ. தூரம் உள்ளது. இந்த சாலையில் திருப்போரூரில் இருந்து சிறுதாவூர் வரை 5 கிமீ தூரத்திற்கு சாலை முழுவதும் பெயர்ந்து பள்ளம், மேடாக காட்சி அளிக்கிறது. 20க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்று, இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்டோ மற்றும் வாடகை ஊர்திகள் சங்கம் மற்றும் ஆமூர், சிறுதாவூர் ஆகிய கிராம மக்கள் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். சுமார் 100க்கும் மேற்பட்டோர் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையின் நடுவே அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருப்போரூர் வழியாக சென்னை செல்லும் வாகனங்களும், திருக்கழுக்குன்றம் நோக்கி செல்லும் வாகனங்களும் சாலையின் இரு புறமும் வரிசை கட்டி நின்றன.

இதையடுத்து, தகவல் அறிந்த திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்ஐக்கள் ராஜா, பன்னீர்செல்வம், குப்புசாமி, நாராயணன் மற்றும் ஏராளமான போலீசார் மறியல் நடைபெற்ற இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிட்ம பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் போக்குரவத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Related Stories: