சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பாரம்பரிய மருத்துவ தொழில்நுட்ப மையம்’ என்ற புதிய மையம் நிறுவப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் ‘பாரம்பரிய மருத்துவ தொழில்நுட்ப மையம்’ என்ற பெயரில், பாரம்பரிய மருத்துவத்தின் மருத்துவ பயன்களை அறிவியல் ஆய்வுகளின் உதவியுடன் நிரூபிப்பதாகும். பாரம்பரிய மருத்துவம் தொடர்பான மருந்துகளின் சூத்திரங்கள் மற்றும் பயன்பாடுகள், மூலிகைகளிலிருந்து கூறுகளை பிரித்தெடுத்தல், நிலைப்புத்தன்மை ஆய்வுகள், நோய் கண்டறியும் கருவிகள், உணவு சூத்திரங்கள், மூலிகை தோட்டம், தரவுத்தளம் மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல் போன்ற கருப்பொருள்களை இம்மையம் ஆய்வு செய்யவுள்ளது.
பல்வேறு துறைசார்ந்த ஆராய்ச்சிகளுக்கு பெயர் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம், உலகளவில் அதன் மதிப்பை நிரூபிக்கும் வகையில் அதிநவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள் ஆராயப்படும். கொரோனா தொற்று காலத்தில், பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவம் நன்கு அறியப்பட்டாலும் தொழில்நுட்ப பற்றாக்குறை காரணமாக, மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சமகால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறிவியல் தொடர்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. பயோடெக்னாலஜி, உணவு தொழில் நுட்பம், ஐடிஐ, மருத்துவ இயற்பியல்-வேதியியல், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 40 பேருடன், அதிநவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகளை ஆராய இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையமானது பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது. தொடர்ந்து யோகா, யுனானி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும். மேலும் பல்கலை கழக மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாரம்பரிய மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிராமபுரங்களில் இதற்கான முகாம்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.