சூளை மேனி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: சூளைமேனி  கிராமத்தில் சமுதாயக்கூடத்தில் இயங்காமல், தனியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள சூளைமேனி  ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், மஞ்சள் நீராட்டுவிழா போன்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடத்த பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச்சென்று அங்குள்ள திருமண மண்டபங்களை நாட வேண்டியிருந்தது. அவ்வாறு நடத்த அதிகளவில் வாடகை கொடுக்கவேண்டியுள்ளது.

எனவே சூளைமேனி பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.   அதன்படி கடந்த 2013ம் ஆண்டு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் அந்த சமுதாயக் கூடத்தில் தற்போது அரசின் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு பாலவாக்கம், லட்சிவாக்கம்,  கீழ் கரமனூர் கண்டிகை, தண்டலம், ஆத்துப்பாக்கம் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் வந்து, தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்கள். எனவே இதனால் சமுதாயக்கூடம் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சூளைமேனி பகுதியில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: