பட்டியலின மாணவன் தற்கொலையை கண்டித்து சென்னை ஐ.ஐ.டி முன்பு காங்கிரசார் போராட்டம்: தீப்பந்தங்களை ஏந்தி பங்கேற்றதால் பரபரப்பு

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களின் தற்கொலையை கண்டித்து சென்னை ஐஐடி முன்பு காங்கிரசார் நேற்று தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களின் தற்கொலையை கண்டித்து சென்னை  ஐஐடி அருகே நேற்று இரவு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமை தாங்கினார். மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, மாநில செயலாளர் விஜயசேகர், ரஞ்சித்குமார், உமாபாலன், சாலமன் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, “உயர்கல்வி நிறுவனங்களில் மேல் ஜாதியினரின் ஆதிக்கமும், ஜாதிய  அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுவதால் தான் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்து  வருகின்றன” என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதில், காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அளித்த பேட்டி: ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய பல்கலைக் கழகங்களில் 2014 முதல் 2021 வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

இதில்  71 பேர் பட்டியலின, பழங்குடியின, பின்தங்கிய சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள். இதில் ஐ.ஐ.டி.யில் மட்டும் 34 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதில் 18 மாணவர்கள் பட்டியலின, பின்தங்கிய மாணவர்கள். உயர்கல்வி நிறுவனங்களில் மேல் சாதியினரின் ஆதிக்கமும், சாதிய அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுவதால் தான் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதை கண்டிக்கும் வகையிலும், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்தும் காங்கிரஸ் எஸ்சி துறை, மாணவர் காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: